
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரும்பாலான தனியார் பால்கோவா கடைகளில் சட்டவிரோதமாக ஆவின் மற்றும் கூட்டுறவு சங்க பெயரை பயன்படுத்துவதால், எது உண்மையான கூட்டுறவு பால்கோவா என தெரியாமல் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களும், மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்பவர்களும் பால்கோவா வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ரத வீதி, பேருந்து நிலையம், மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பால்கோவா விற்பனை கடைகள் உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், இங்குள்ள பெரும்பாலான தனியார் பால்கோவா கடைகளில் ஆவின் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பெயர்ப் பலகையை பயன்படுத்துகின்றனர். கடைகளின் பெயர்ப்பலகை மற்றும் பால்கோவா பாக்கெட்களிலும் ஆவின் பெயர், தமிழ்நாடு அரசு முத்திரை, கூட்டுறவு சங்கங்களின் பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால், எது உண்மையான ஆவின் மற்றும் கூட்டுறவு சங்க உற்பத்தி பால்கோவா என தெரியாமல் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குழப்பமடைகின்றனர்.
முன்பு ஆவினில் பால் வாங்குபவர்கள் ஆவின் பெயரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பால் உற்பத்தி குறைவால் ஆவினில் இருந்து கடைகளுக்கு பால் வழங்கப்படுவது இல்லை. இதனால் தேனி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் பால்கோவா உற்பத்தியாளர்கள் பால்கோவா தயாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில், இப்பகுதியில் காய்ச்சும் நாட்டு வெல்லம் பயன்படுத்தி புளிய மரத்தின் உறவுகளை எரித்து பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் கூட்டுறவு பால்கோவாவிற்கு தான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் எல்லோரும் கூட்டுறவு மற்றும் ஆவின் பெயரை பயன்படுத்துவதால் மக்கள் ஏமாறுகின்றனர். ஆவின் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சட்டவிரோதமாக அரசு முத்திரையை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ‘தனியார் பால்கோவா விற்பனை கடைகளில் ஆவின் பெயரையோ, தமிழ்நாடு அரசு முத்திரை, கூட்டுறவு சங்கங்களின் பெயரையோ பயன்படுத்த அனுமதி இல்லை. விதிமீறி ஆவின் பெயரை பயன்படுத்தும் கடைகள் மீது மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.