
ரூ.7.88 கோடி மதிப்பீட்டில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் படகு இல்லம் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமேசுவரம் ஆன்முக தலமாக மட்டுமின்றி, சிறந்த சுற்றுலா தலமாகவும் மாறி வருகிறது. இங்குள்ள ராமநாத சுவாமி கோயில், பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்கரை, விவேகானந்தர் இல்லம், அப்துல் கலாம் நினைவகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண்பதற்காக ஆண்டுதோறும் 4 கோடி பேர் வருகின்றனர்.
ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கேரளாவைப்போல படகு இல்லம் சுற்றுலாவை அறிமுகப்படுத்த தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே ரூ.7.88 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் கட்டடப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையிலிருந்து கோதண்ரட ராமர் கோயில் வழியாக தனுஷ்கோடி வரையிலும், அக்னி தீர்த்த கடற்கரையிலிருந்து வில்லூண்டி தீர்த்தம் வழியாக பாம்பன் குருசடை தீவு ஆகிய இடங்களுக்கும் முதல் கட்டமாக படகு இல்லம் சுற்றுலா நடத்துவதற்கு கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த படகு இல்லம் சுற்றுலா மூலம் கடல் பரப்பில் காணப்படும் கடல் புறா, கொக்கு, நெடுங்கால் உள்ளான், நத்தைகொத்தி நாரை, கூழைக்கடா, தாரா, கரண்டிவாயன், நீர்க்காகம், பிளமிங்கோ, தேன் பருந்து, கடல்பருந்து உள்ளிட்ட பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். மேலும், படகின் அடியில் பொருத்தப்படும் கண்ணாடி வழியாக பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்களை காண முடியும். படகிலேயே இரவில் தங்குவதற்கும், மிதக்கும் உணவகம் ஏற்படுத்தவும் கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது.