சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது. ஆனாலும், ட்ரம்ப் அந்தப் போர் நிறுத்தத்துக்கான ‘நற்பெயரை’ தனக்கு வழங்கிக் கொள்வதை நிறுத்தியபாடில்லை.
இந்நிலையில், தென் கொரியாவில் ஆசியா – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ட்ரம்ப் மீண்டும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
ட்ரம்ப் அங்கு பேசுகையில், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன. நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரை தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள். பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர் ரொம்ப கெடுபிடியானவரும் கூட. போரை நாங்கள் தொடர்வோம் என்றார். நான் அவரிடம், ‘நீங்கள் நான் பார்த்த அதே கெடுபிடியான நபர் தான்.’ என்றேன். நான் மோடியிடம் நீங்கள் போரைத் தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்றேன். பின்னர் பாகிஸ்தான் அரசிடமும் அதையேச் சொன்னேன். பின்னர் அவர்களே என்னை அழைத்து போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.
நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறேன். எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது. எங்களுக்குள் நல் உறவும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும், ஃபீல்டு மார்ஷலும் சிறந்த போராளிகள். ” என்றார்.
முன்னதாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பேசும்போதும், “இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இந்தப் போரில் 7 அழகிய, புதிய விமானங்கள் வீழ்த்தப்பட்டன.” என்றார். இதுவரை பலமுறை விமானங்கள் வீழ்த்தப்பட்டது குறித்து பொத்தாம் பொதுவாகக் கூறிவரும் ட்ரம்ப், ஒருமுறை கூட அது இந்தியா, பாகிஸ்தானில் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்று வெளிப்படையாகக் கூறியதில்லை.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. பாகிஸ்தான் தரப்பும் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டன. இருப்பினும் அதனை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்தது. அதன் பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தப் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லை என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





