Last Updated:
“சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்” என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து அறியலாம்.
“சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்” என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து அறியலாம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல – மகர விளக்கு பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வழிபாடுகளை மேற்கொண்டார். மண்டல கால பூஜை தொடங்கியதையடுத்து, ஏராளமான பக்தர்கள் சரண முழக்கத்துடன் ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவில் 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாக 20 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டிச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். மண்டல பூஜை அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் நிலையில், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்குமென்பதை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் கேரள சுகாதாரத்துறை சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு, “சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும். சபரிமலை வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஐயப்ப பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய் பரவும் நிலையில் சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் அச்சப்பட வேண்டாம். சபரிமலை சென்று வந்த 3 நாட்களுக்குப் பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள். மற்றபடி ஆறுகள், குளம் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கொதிக்கவைத்த நீரை பருகவும்; மலை ஏறும்போது மெதுவாக, இடைவெளி விட்டு ஏறவும். கொரோனா தொற்றுபோல் அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
November 17, 2025 5:51 PM IST
[]
Source link







