
Last Updated:
சென்னை உயர் நீதிமன்றம், மத மோதலை தூண்டும் வகையில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. ஆர்பாட்டத்தில் வெறுப்புணர்வு மற்றும் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக ஹெச். ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது .இந்த நோட்டீஸ் எதிர்த்து சென்னை உயர்நீமன்றத்தில் ஹெச். ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டிசை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜாவுக்கு உத்தரவிட்டார்.
June 23, 2025 7:01 PM IST
மத மோதல் பேச்சு வழக்கு: “ஹெச்.ராஜா காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!