
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல நிர்வாக காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி நாளையும் (பிப்.19), நாளை மறுநாளும் (பிப்.20) சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.
இந்நிலையில் ”நிர்வாக காரணமாகவும், பாதுகாப்பு நலன் கருதியும் நாளையும் (பிப்.19), நாளை மறுநாளும் (பிப்.20) சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதே சமயம், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.