
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை நீடிப்பதால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதனால் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாலுமுக்கு பகுதியில் 38 மி.மீ. ஊத்து பகுதியில் 34 மி.மீ. காக்காச்சி பகுதியில் 32 மி.மீ. மாஞ்சோலையில் 27 மி.மீ. மணிமுத்தாறில் 5 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,003 கனஅடி நீர் வந்தது. 1,750 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 118.55 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.11 அடியாக இருந்தது.
இதேபோல, தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணையில் 4 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டையில் 18 மி.மீ. அடவிநயினார் அணையில் 16 மி.மீ. தென்காசியில் 6 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 67.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 70 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.37 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பிரதான அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, புலியருவி,சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.