
Last Updated:
இந்தச் சலுகை டிசம்பர் மாதம் 3 மற்றும் 17-ம் தேதி மட்டுமே செல்லும் என்றும் பயணிகளிடம் டிஜிட்டல் கட்டண வசதியை ஊக்குவிக்கும் பொருட்டே இது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) தொடக்க நாளை கொண்டாடும் விதமாக டிசம்பர் 3-ம் தேதி பயணிகள் அனைவரும் வெறும் ரூ.5 டிக்கெட்டில் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் அன அறிவிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. முதலில் 3-ம் தேதி மட்டுமே இந்த சிறப்பு பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது டிசம்பர் 17-ம் தேதியும் ரூ.5 டிக்கெட்டில் மக்கள் பயணம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மெட்ரோவில் இரண்டு கி.மீ வரை பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு பயணக் கட்டணம் குறித்து X தளத்தில் விளக்கமாக சென்னை மெட்ரோ பதிவிட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் தொடக்க நாளை முன்னிட்டு இந்த சிறப்பு ரூ.5 பயணச்சீட்டை பேடிஎம், வாட்ஸப், போன்பே, QR கோட் போன்றவை மூலமாக மட்டுமே பெற முடியும்.
மேலும் இந்தச் சலுகை டிசம்பர் மாதம் 3 மற்றும் 17-ம் தேதி மட்டுமே செல்லும் என்றும் பயணிகளிடம் டிஜிட்டல் கட்டண வசதியை ஊக்குவிக்கும் பொருட்டே இது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ தரப்பில் கூறப்படுகிறது. எனினும் இந்த சிறப்பு கட்டணச் சலுகையை ரயில் நிலைய கவுண்டரிலோ அல்லது CMRL செயலியிலோ பெற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிசம்பர் 3-ம் தேதி மட்டுமே சிறப்பு கட்டணச் சலுகை அறிவிக்கப்படிருந்த நிலையில், சென்னையில் புயல் காரணமாக கடும் மழை பெய்து வருவதால் இந்தச் சலுகையை டிசம்பர் 17-ம் தேதியும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது சென்னை மெட்ரோ.
எங்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை இடைவிடாமல் கோரத் தாண்டவம் ஆடி வருவதால், அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தச் சலுகையை கூடுதலாக ஒரு நாள் நீடித்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் இந்த சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிலிருந்து ஒட்டுமொத்த சென்னையே முடங்கிப் போயுள்ளது. பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் சில இடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்திலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. குறிப்பாக பரங்கிமலை (St Thomas Mt) மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடி உயரத்திற்கு மழைத்தண்ணீர் நிறம்பியுள்ளது. இதனால் பயணிகள் யாரும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை இருப்பதால் பொதுமக்கள் யாரும் தயவுசெய்து இங்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read | கோடிஸ்வர்களின் கனவு கார்கள்… உலகின் டாப் 9 ஆடம்பர சொகுசு கார்களின் பட்டியல்
சென்னையின் அருகே மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நகர் முழுதும் பல இடங்கள் வெள்ளக் காடாக தத்தளிக்கின்றன. கடுமையான காற்றும் இடைவிடாத மழையும் பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கையிலும் சிறிது தேக்கம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டிணத்திற்கு இடைபட்ட கடலோரப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலைத் துறை கூறியுள்ளது.
Chennai,Tamil Nadu
December 05, 2023 6:48 PM IST