சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை | statement condemns Pahalgam attack at sco in China President Putin PM Modi talks

Spread the love


தியான்ஜின்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். பின்னர், அவர்கள் கூறியதாவது:

பிரதமர் மோடி: இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு வரும் டிசம்பரில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க உள்ளார். அவரது வருகையை எதிர்பார்த்து 140 கோடி இந்தியர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். புதினை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விடுகிறது.

இந்தியா – ரஷ்யா இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இக்கட்டான காலங்களில்கூட இரு நாடுகளும் தோளோடுதோள் நின்று பயணம் செய்கின்றன. உலக நன்மை, அமைதி, வளத்துக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர அமைதி திரும்ப வேண்டும்.

ரஷ்ய அதிபர் புதின்: ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. குளோபல் சவுத் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக எஸ்சிஓ அமைப்பு செயல்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் நிறைவாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவு அளித்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எஸ்சிஓ கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குவிங்டாங் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சீனா ஏற்கவில்லை.

இதனால், கூட்டறிக்கையில் கையெழுத்திட அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். ஒருமித்த கருத்து எட்டப்படாததால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்சிஓ மாநாடு முடிவடைந்ததும், அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஓட்டலுக்கு புறப்பட்டார். அப்போது பிரதமர் மோடியையும் அவர் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் ஓட்டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே தீவிர ஆலோசனை நடத்தினர். அமெரிக்க அரசின் வரி விதிப்பு, உக்ரைன் போர் குறித்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

‘பரிதவித்த பாகிஸ்தான்’: ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் கைகோத்தபடி நடந்து சென்றனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரமாக நின்றிருந்தார். அவர் விரக்தியுடன் பார்க்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார். ஆனால் அவரது பேச்சு கருத்தில் கொள்ளப்படவில்லை. ‘எஸ்சிஓ மாநாடு முழுவதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்துவிடப்பட்டு, ஒருவித பரிதவிப்புடனே அவர் இருந்ததுபோன்ற சூழ்நிலை நிலவியது’ என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று நிறைவு பெற்றது. 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையானது, பாதுகாப்பு, வர்த்தக வழித்தட இணைப்பு, வாய்ப்பு ஆகிய 3 முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பும், அமைதியும்தான் அடித்தளம். ஆனால் இன்றைய சூழலில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. தீவிரவாதத்துக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கும் சில நாடுகளை நம்மால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிப்போர், நிதியுதவி வழங்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு எஸ்சிஓ உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்திருப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன். பஹல்காம் தாக்குதல் என்பது இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். அதற்கு கண்டனம் தெரிவித்த நட்பு நாடுகளுக்கு மனமார்ந்த நன்றி.

எஸ்சிஓ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளை இணைக்க வலுவான வர்த்தக வழித்தடங்கள் இருக்க வேண்டும். எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் இளம் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். உறுப்பு நாடுகளின் மக்களிடையே தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் எஸ்சிஓ நாடுகளும் பங்கேற்க அழைப்பு விடுகிறேன். ஐ.நா. சபையின் சீர்திருத்தத்துக்காக எஸ்சிஓ நாடுகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.





Source link


Spread the love
  • Related Posts

    அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர் | Trump must stop Gaza war if he wants Nobel Peace Prize French President Macron

    Spread the love

    Spread the love      பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *