
நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த மலர்க் கண்காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
கடையேழு வள்ளல்களில் ஒரு வரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பிக்கும் வகையில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின்போது வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா நேற்று காலை தொடங்கியது. எம்எல்ஏ கு.பொன்னுசாமி, கோட்டாட்சியர் வே.சாந்தி தலைமை வகித்து, வல்வில் ஓரி படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி, அங்குள்ள பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெற்றது. குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ரோஜா மலர்களால் குதிரை, மான், காதல் சின்னம், காய்கறிகளால் கரடி, பறவை உருவங்கள், தானியங்களால் கால்நடை உருவங்கள், பழங்களால் முதல்வர் உருவம் ஆகியவை அமைக்கப்பட்டுஇருந்தன.
மலர்க் கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கிப்பூ உள்ளிட்ட 20 வகையான மலர்கள் இடம் பெற்றிருந்தன. மூலிகைப் பயிர்கள், அவற்றின் மருத்துவக் குறிப்புகளுடன் இடம்பெற்றிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
மேலும், செம்மேட்டில் உள்ள கலையரங்கில் இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவிகளின் கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (ஆக. 3) நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடக்கிறது.