
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் கோடை வாசஸ்தலங்களில், மலைகளின் இளவரசியாகத் திகழ்கிறது கொடைக்கானல். கோடைகாலத் தொடக்கத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கத்தால் செடிகள் கருகி, காட்டுத்தீ ஏற்பட்டது. வனம் மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மாலையில் தங்கும் விடுதிகளை விட்டு வெளியே செல்லவில்லை. கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது.
தொடர்மழை காரணமாக வெள்ளி, கரடிச்சோலை, வட்டக்கானல், தேவதை, எலிவால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். பகலில் மோயர் சதுக்கம், கோக்கர்ஸ் வாக் பகுதிகளில் மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து, சுற்றுலாப் பயணிகளைத் தழுவிச் செல்வது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் மழையில் நனைந்தபடியே ஏரியில் உல்லாசப் படகுச் சவாரி மேற்கொண்டனர். பிரையன்ட் பூங்காவில் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள், அடுத்த மாத தொடக்கத்தில் பூத்துக் குலுங்க உள்ளன.
கொடைக்கானலில் நேற்று பகலில் 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவியது. காற்றில் ஈரப்பதம் 73 சதவீதம் இருந்ததால் பகலிலேயே குளிர் உணரப்பட்டது. தரைப்பகுதியில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், கோடை சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.