
கொடைக்கானல்: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொடைக்கானலில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தில் பல்லடுக்கு (மல்டிலெவல் கார் பார்க்கிங்) வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு போக்குவரத்துத் துறை அனுமதிக்க மறுப்பதால், திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பய ணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, 2024 மே 7-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் விடுமுறை நாட்களில் சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. குறிப்பாக, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையோரங் களிலும், பேருந்து நிலையத்திலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம். இதனை தவிர்க்க, பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் கார் பார்க்கிங்) அமைக்க வேண்டும் என்பது கொடைக்கானல் மக்கள், சுற்றுலாப் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
தயங்கும் போக்குவரத்து துறை: இந்நிலையில், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 3.50 ஏக்கர் காலி இடத்தில் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, அந்த இடத்தை கேட்டு போக்குவரத்து துறைக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து 2024 ஜூலை 26-ல் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.
ஆய்வில், பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள், போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டார். ஆய்வு செய்து 6 மாதங்களான நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான இடத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க அனுமதித்தால், எதிர்காலத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்தவோ அல்லது அந்த இடம் கையை விட்டு போய்விடுமோ என்ற எண்ணத்தில் இன்னும் போக்குவரத்து துறை அனுமதி தர மறுத்து வருகிறது.
இதனால் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் கோடை சீசன் தொடங்கி விடும். சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அப்போது, வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல், பல மணி நேரம் மலைச்சாலையில் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்படும்.

நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா வாகனங்கள்.
வாகன நெரிசலுக்கு பயந்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்லும் திட்டத்தையே மறந்து விட்டு, வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள பலரது வாழ்வாதாரம் பாதித்தது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர், அதிகாரிகளிடம் பேசி அத்திட்டத்தை செயல்படுத்துவோம்.
இது தவிர, வட்டக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்திலும், ரோஜா பூங்கா அருகேயுள்ள வருவாய் துறைக்கு சொந்தமான 1.50 ஏக்கர் நிலத்திலும் திறந்தவெளி கார் பார்க்கிங் வசதி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், வாகன நெரிசல் கட்டுப் படுத்தப்படும். என்று கூறினார்.