
Last Updated:
செல்லூர் ராஜு துரியோதனன் போன்று எழுந்து நின்று கைகளை உயர்த்தி கேட்கிறார், அதனால் அவருக்கு துணை கேள்வி கேட்க அனுமதி வழங்கக்கூடாது என துரைமுருகன் கூற பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது துணைக் கேள்வி கேட்பதற்கு அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு அனுமதி கோரினார். சபாநாயகர் அப்பாவு அவருக்கு அனுமதி வழங்கினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற விதிப்படி கேள்விகளைக் கேட்கும்போது உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி கேட்கவேண்டும் சபாநாயகர் அனுமதி கொடுப்பார். ஆனால் செல்லூர் ராஜு துரியோதனன் போன்று எழுந்து நின்று கைகளை உயர்த்தி கேட்கிறார், அதனால் அவருக்கு துணை கேள்வி கேட்க அனுமதி வழங்கக்கூடாது என கூற பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
பின்னர் சபாநாயகர் அப்பாவு, ‘அமைச்சர் துரைமுருகன் உங்கள் மீதுள்ள பாசத்தில் சொல்கிறார். நீங்கள் துணைக் கேள்வி கேளுங்கள்’ என செல்லூர் ராஜூ க்கு அனுமதி வழங்கினார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகலில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இரவு நேரத்திலும் மருத்துவர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: அரிய உரைகள், புகைப்படங்களுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு மலர் வெளியீடு
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதுமே மருத்துவமனைகளின் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவித்த புதிய திட்டத்தின்படி மதுரைக்கு 60 மருத்துவமனைகள் வர உள்ளது நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
May 10, 2022 11:45 AM IST