
நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான கீறல் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலம் உறுதிதன்மையுடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடிப் பாலம் அமைக்கப் பட்டது.
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியை நெருங்கும் இடத்தில் இந்த பாலத்தில் உள்ள கண்ணாடி தளத்தில் லேசான கீறல் விழுந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கண்ணாடி பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்து நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் திருவள்ளு வர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைதள பாலத்தை இதுவரை சுமார் 17.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர்.
இக்கண்ணாடி பாலம் தகுதியான வல்லுநர்களை கொண்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மூலம் பாலத்தின் மேல்பகுதியில் பெயின்ட் அடித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பணியாளர் கையில் இருந்த சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்திலிருந்து 6-வது கண்ணாடியின் மேல் விழுந்ததில் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது.
இதன் பிறகு சென்னை கண் ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் கண்ணாடி புதிதாக செய்வதற்கு ஒப்பந்ததாரர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கண்ணாடி மொத்தம் 4 அடுக்குகளாக உள்ளதால், உரிய பாதுகாப்பு முறையில் தயாரிக்கப்பட்டு, கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து 4-ம் தேதி கண்ணாடியை இணைக்கும் வல்லுநர்கள் முன்னிலையில் கண்ணாடி சோதிக்கப்பட்டது. இக்கண்ணாடியை பாலத்தில் பொருத்துவதற்கு மும்முனை மின் இணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், மின்இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், தற்போது ஜெனரெட்டர் மூலம் கண்ணாடியை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி இரு தினங்களில் நிறைவுபெறும்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்ற போதும் பாலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. எனவே, சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை தொடர்ந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.