சென்னை: ‘சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பஸ், ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது.
இந்த செயலியில் அனைத்து பொதுபோக்குவரத்து பயணத்துக்கான டிக்கெட் பெறும் வசதி இருப்பதால், பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை: இந்நிலையில், இந்த செயலியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஎச்ஐஎம் எனப்படும் பீம் மற்றும் நேவி செயலியை பயன்படுத்தி யுபிஐ வாயிலாக பணம் செலுத்துவோர், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளின் முதல் டிக்கெட்டை ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடியும்.
அதாவது, விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்கு ரூ.40 கட்டணம். செயலியில் ரூ. 32-ல் டிக்கெட் புக்கிங் செய்யலாம். ஆனால், சென்னை ஒன்று செயலியை பயன்படுத்தி ‘பீம் மற்றும் நேவி’ செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுத்தால் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். இதே போல, மாநகர் பேருந்துகளில் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
மின்சார ரயிலில் பயணிப்பவர்களும் இந்த சலுகையை பயன்படுத்த முடியும். ஆனால், இந்த சலுகை ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும் தான் கிடைக்கும். இந்த சலுகை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


