ஆய்வு…
204 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், உலகளாவிய நோய்ச் சுமை (GBD) பதிவுசெய்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட நோய்கள், காயங்கள் மற்றும் நோய் காரணிகளின் போக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 2023 வரையிலான தகவல்கள் சேமிக்கப்பட்ட நிலையில், அவற்றை IHME (வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம்) ஒருங்கிணைத்தது. அந்த முடிவுகளே லான்செட் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் தெரியவந்தவை:
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 138 மில்லியன் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா, சீனாவுக்கு (152 மில்லியனுக்கு) அடுத்தபடியாக உலகளவில் அதிக நோயாளிகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தற்போது உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களில், முக்கியமானதாக மாறியுள்ளது சிறுநீரக நோய். 2023-ஆம் ஆண்டில் மட்டும், இதனால் சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 18%, தெற்காசியாவில் கிட்டத்தட்ட 16%, சஹாராவின் தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் 15% க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள்பட்ட சிறுநீரக நோய், இதய நோய்களுக்கு முக்கிய பங்களிக்கிறது.
2023 ஆம் ஆண்டில் இதய நோயால் ஏற்பட்ட உலகளாவிய மரணங்களில் 12% நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு மற்றும் உடல் பருமனைத் தொடர்ந்து, இது இதயம் தொடர்பான இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணமாக விளங்குகிறது.
நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு காரணமான 14 முக்கிய ஆபத்து காரணிகள் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகள், பழங்கள்-காய்கறிகள் குறைவாக கொண்ட உணவுமுறை போன்றவை அடங்குகிறது.
“நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது பிற நோய் பாதிப்புக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இருந்தபோதிலும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை” என்று IHME-இன் மூத்த பேராசிரியரான தியோ வோஸ் குறிப்பிட்டார்.
பெரும்பாலானோர் இந்த நோயின் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், தகுந்த பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் உத்திகள் மிகவும் அவசியமாகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய நடவடிக்கைகள் நோயின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதோடு, இதய நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களைத் தடுக்கவும் உதவும் என்று கூறுகின்றனர்.
சிகிச்சை மற்றும் அணுகல் சவால்கள்:
“டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கான அணுகல் உலகளவில் இன்னும் குறைவாகவும், சீரற்றதாகவும் உள்ளது. இதனால் நோயின் மேம்பட்ட நிலைகளில் சிகிச்சை பெற முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே நோயறிதல் மற்றும் மலிவு விலை சிகிச்சைக்கான அணுகல், முக்கியமான ஆபத்து காரணிகளை சமாளித்தல் மற்றும் நோய் முன்னேறுவதைத் தடுக்கும் உத்திகள் போன்றவற்றை கையாள அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவே நோயாளிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீது நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுத்தும் சுமையைக் குறைக்கும் ஒரே வழி” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
November 09, 2025 5:31 PM IST
[]
Source link






