
புதுடெல்லி: அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே அர்ஜென்டினாவுக்குப் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா நாடு, இந்தியர்களுக்கான விசா நுழைவு விதிகளை தளர்த்தியுள்ளது. பயன்பாட்டில் உள்ள அமெரிக்க சுற்றுலா விசா வைத்திருப்போர், அர்ஜென்டினா விசாவுக்கு தனியாக விண்ணப்பிக்காமல் பயணிக்கலாம் என்று இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ காசினோ புதுடெல்லியில் இன்று தெரிவித்தார்.
விசா கொள்கை மாற்றம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட காசினோ, “இது அர்ஜென்டினா மற்றும் இந்தியா இரண்டு நாடுகளுக்கும் அற்புதமான செய்தி. எங்கள் அற்புதமான நாட்டுக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
இதுகுறித்த அறிவிப்பு அர்ஜென்டினாவின் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இனி அமெரிக்க செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள், அர்ஜென்டினாவுக்கும் கட்டுப்பாடு இன்றி செல்லலாம். அர்ஜென்டினாவின் சுற்றுலாவை மேம்படுத்தவும், இருதரப்பு கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் இந்த அறிவிப்பு உதவும்” என்று மரியானோ காசினோ கூறினார்.