
சென்னை: அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை இயக்குகிறது.
இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடக் கலையின் பெருமையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, ‘மார்வெல்ஸ் ஆஃப் சென்ட்ரல் இந்தியா’ என்ற பெயரில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்குகிறது. சவுத் ஸ்டார் ரயில், டூர் டைம்ஸ் சுற்றுலா ரயில் ஆப்ரேட்டர் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலா ரயில், கஜுராஹோ, அஜந்தா, எல்லோரா, ஒடிசா, ஹைதராபாத், குவாலியர், அவுரங்காபாத் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 13 நாள் சுற்றுலா பயணம், வரும் ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன், வழித் தடங்கள் பற்றிய தகவல்களுக்கான பொது அறிவிப்பு அமைப்புகள், பொழுதுபோக்கு வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு சுற்றுலா மேலாளர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த பயணத்தில் தென்னிந்திய உணவு வகைகள் உட்பட பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்படும்.
இந்த சிறப்பு ரயில் கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து கிளம்பி தமிழகத்தில் போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இந்த பயணத்துக்கு விடுப்பு (எல்டிசி) பயணச் சலுகையைப் பயன்படுத்தி பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த சுற்றுலாவுக்கு www.tourtimes.in என்ற இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அல்லது பயணிகள் 7305 85 85 85 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.