காஞ்சிபுரத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசியது என்ன?
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. 2,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் இல்லாமல், முழுக்க முழுக்க உள் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் என எம்ஜிஆர் பாட்டு பாடியிருப்பார். அப்படிப்பட்ட நம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் இந்த காஞ்சிபுரம். தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தான் ஆரம்பித்த கட்சி கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று திமுக மீது விமர்சனத்தை வைத்து பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து, “தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருந்தாலும் நாங்கள் அதை கண்டுகொள்ள போவதில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் நம் மீது வன்மத்துடன் இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்லை. ஆனால், என்னை, உங்களை எல்லோரையும் பொய் சொல்லி ஓட்டு போட வைத்து ஏமாற்றி, ஆட்சிக்கு வந்து, நல்லது செய்வது போல நாடகம் ஆடுகிறார்களே அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை கையிலெடுத்தோம். மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை மறந்தது யார்? கொள்கை எவ்வளவு கிலோ என்று கேட்கும் அளவுக்கு ஒரு கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். நமக்கு கொள்கை இல்லை என்று நம்மை பார்த்து கேட்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டை அறிவித்த எங்களுக்கு கோட்பாடு இல்லையா?.
இவர்கள் கொள்கையே கொள்ளை தானே? கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள விழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர் போல் நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா என சொன்னோம். இன்னும் நாங்கள் விமர்சிக்க தொடங்கவே இல்லை.
மக்கள் எல்லோருக்கும் உங்களை பொறுத்தவரை தற்குறிகளா? நீங்கள் சொல்லும் இந்த தற்குறிகள் தான், வாழ்நாள் முழுவதும் விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப் போகிறார்கள். இவர்கள் யாரும் தற்குறிகள் கிடையாது. தமிழக அரசியலின் ஆச்சரியக்குறி. தமிழக அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி. லாஜிக்கே இல்லாமல் தற்குறி தற்குறி என்று சொல்கிறார்கள்” என்று முடிக்கும் போதும் முதல்வர் ஸ்டாலினை “மை டியர் அங்கிள்” என்று விமர்சித்து காட்டமாக பேசினார்.
விஜய் தனது பேச்சில் மத்திய அரசை பற்றியும், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பற்றியும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. SIR போன்ற திட்டங்கள் பற்றி விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை பற்றி எதையும் விஜய் பேசவில்லை.
Kanchipuram,Tamil Nadu
November 23, 2025 12:06 PM IST
TVK Vijay | தொடக்கமும் முடிவும் திமுக அட்டாக்… அதிமுக, பாஜக குறித்து ஒரு வார்த்தை பேசாத விஜய்… தவெக கூட்டத்தில் நடந்தது என்ன?






