ஈரோடு விஜயமங்கலத்தில் பேசிய விஜய் ”எனக்கு எதிராக சூழ்ச்சி நடக்கிறது” என்று பேசினார். அவரது பேச்சின் முழு விவரம்?
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவெளியில் பரப்புரையில் பங்கேற்றார் தவெக தலைவர் விஜய். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின், சொந்த மாவட்டமான ஈரோட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் கூடுதல் கவனம் பெற்றது இந்த நிகழ்வு.
நிகழ்வில் பேசிய விஜய், “நல்ல காரியத்தை மஞ்சள் வைத்து தொடங்குவார்கள். மஞ்சள் என்றாலே தனி வைப். தவெக கொடியிலும் மஞ்சள் உள்ளது. மங்களகரமான மஞ்சள் விளைகிற பூமி ஈரோடு. இந்த ஈரோடு மண் விவசாயத்திற்கு பெயர் பெற்ற மண். இந்த மண்ணிற்கு கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய். அதை கட்டியதில் உணர்வுபூர்வமாக நிறைய விஷயங்கள் நடந்தன.
அன்று இந்த அணை கட்டியவருக்கு அவரின் தாய் கொடுத்த தைரியம் போல தான் எனக்கு நீங்கள் தைரியம் கொடுக்கிறீர்கள். அதனை கெடுக்க சூழ்ச்சி செய்ய சிலர் செய்கின்றனர். அவர்களுக்கு தெரியாது இது இன்றைக்கு வந்த உறவல்ல, இது 35 வருடங்களுக்கு மேலான உறவு. என்ன பண்ணாலும் நீங்கள் என்ன முயன்றாலும் எல்லாத்தையும் விட்டு மக்களுக்காக வந்திருக்கிற இந்த விஜயை மக்கள் என்றைக்கும் கைவிட மாட்டார்கள்.
தண்ணீரை சேமித்து வைத்த குடிநீருக்கும் விவசாயத்திற்கும் செய்வது எவ்வளவு நல்ல விஷயம். ஆனால் எதையும் செய்யாமலே கதைகளை அடித்துவிடுகிறார்கள். அத்திகடவு – அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தலாம். அப்படி செய்தால் 3 மாவட்டங்களில் பல லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். வள்ளுவர் கோட்டத்தில் காட்டுகிற அக்கறையை இங்கே வாழ்வாதாரத்துக்கு காண்பிக்கலாம். இங்கு நடப்பது ஆட்சியா இல்லை கண்காட்சியா?. 21ஆம் நூற்றாண்டில் மக்களை பற்றி எதையும் ஆட்சியாளர்கள் யோசிப்பதில்லை. ஆனால், அந்த காலத்திலேயே மக்களை பற்றி யோசித்து கால்வாயை கட்டிய காலிங்கராயனுக்கு கோடி கும்பிடு.
100 வருஷத்துக்கு முன்னாடி வகுப்புவாத பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். எங்கள் கொள்கை தலைவர் அவர். அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதில் கேள்விகேட்க முடியாது. நாங்க ஒரு வழியில் அரசியல் செய்து போய்க்கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு தான் தவெக தான் ஒரு பொருட்டே இல்லை. அப்புறம் ஏன் கதறுகிறீர்கள். ஏன் புலம்புகிறீர்கள்.
உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள காசு தான் துணை. எனக்கு என் மீது எல்லையில்லா பாசம் வைத்துள்ள இந்த மாஸ் தான் துணை. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளையடிக்க வேண்டாம். பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிப்பவர்கள் எங்கள் அரசியல் எதிரி. அதனால் தான் எதிரி யார் என சொல்லி களத்திற்கு வந்துள்ளோம். களத்தில் இல்லாதவர்களையும் களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை.
கல்விக்கடன் ரத்து, நீட் ரத்து என எத்தனை பொய்யான வாக்குறுதிகள். இதையெல்லாம் சொன்னார்கள், செய்தார்களா?. திமுகவும் பிரச்சினைகளுக்கும் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொண்டவை அதனை பிரிக்க முடியாது. திமுக மஞ்சள் விவசாயத்துக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஈரோடு மண்ணுக்கும் ஒன்றும் செய்யவில்லை. இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களின் நேரம் எல்லாம் விஜயை எதிர்ப்பதும், தவெக-வை எப்படி முடக்குவதில் தான் இருக்கிறது. பவானி – நொய்யல் ஆற்றை இணைப்பது குறித்து வாக்குறுதி கொடுத்தது திமுக, ஆனால் செய்யவில்லை. ஆறுகளை ஒன்றிணைப்பது குறித்து பேசினார்கள். ஆனால் ஆற்று மணல் கொள்ளையடிக்கிறார்கள்.
இதையெல்லாம் பேசினால் என் பக்கம் திரும்பிவிடுவார்கள். நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்லி அசிங்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வது எப்படி இலவசமாகும். மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து நிற்பான். விஜய் எப்போதும் மக்கள் பக்கம் தான். மக்கள் மானத்தோடு வாழ வேண்டும்.
271 அரசு பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்?. ஒரு லட்சம் காலி பணியிடங்களையாவது இந்த ஆட்சி நிரப்பியதா?. சட்டம் ஒழுங்கு சிறப்பாகவா இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்கிறது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சமரசம் இருக்காது.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையும் திமுகவை காலி செய்தார்கள். அவர்கள் சொன்னதை இப்போது நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவிற்கும் தீய சக்தி திமுகவிற்கும் தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான தவெக-வால் மட்டுமே முடியும். செங்கோட்டையன் எங்களுடன் வந்தது எங்களுக்கு பலம். அவரை போல இன்னும் பலர் எங்களுடன் வருவார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படும்.
முதல்வர் பேசினால் சினிமா டயலாக் இல்லையாம். நான் பேசினால் மட்டும் சினிமா டயலாக். தமிழகத்தில் ஆட்சி செய்கிற திமுகவும், ஒன்றியத்தில் ஆட்சி செய்கிற அவர்களும் சரி முதலில் என்னுடைய கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் பேசினார்.
Erode,Erode,Tamil Nadu
December 18, 2025 12:59 PM IST





