
Last Updated:
Rising Bharat Summit 2025:பாம்பன் பாலத்தை திறந்ததில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா 2047 ஆண்டுக்குள் வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தயாராகி விட்டதாக கூறினார்.
ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 குழுமம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் ரைசிங் பாரத் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் உரையாற்றும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக அரசியல், பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இம்மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர் உரையாற்றிய அவர், தான் பிரபலம் அடைவதற்காக வாழ விரும்பவில்லை எனவும் இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டார். 2047 ஆண்டை மையப்படுத்தி இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் பயணம் செய்யத் தயாராகி விட்டதாகவும் தெரிவித்தார்.
வக்பு சொத்துகளின் மீது சிலர் ஆதிக்கம் செலுத்தியிருந்ததாகவும் அதை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, வக்பு சட்டத்திருத்தம் மூலம் வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பாலம் குறித்தும் பிரதமர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் விபத்துகளைத் தடுக்க பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சாலை விதிமீறல்களில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற அவர், தனது காருக்கே இருமுறை அபராதம் கட்டும் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வாகன உற்பத்தியாளர்கள், வாகனத்துடன் சேர்த்து இரண்டு தலைக்கவசங்களையும் வழங்க வைப்பது தொடர்பாக யோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
April 09, 2025 12:18 PM IST