
அமெரிக்க அதிபர் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, எச்1பி விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பதாரர்களுக்கே பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்றும் அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், H-1B விசா பெற இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, ஓர் ஆண்டுக்கான கட்டணம் அல்ல என்றும், விண்ணப்பித்தலுக்காக ஒரு முறை செலுத்தும் தொகை மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே H-1B விசா பெற்று, தற்போது நாட்டிற்கு வெளியே இருந்தாலும், மீண்டும் நாட்டினுள் நுழைவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.
H-1B விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப தேவையில்லை என்றும், அவர்களுக்கு இந்த கட்டணம் அறிவிப்பு பொருந்தாது என்றும், புதிதாக H-1B விசா பெற விண்ணப்பித்தலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நடவடிக்கை, 10 ஆண்டுகள் கழித்து பலன் அளிக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் தந்துள்ளார்.
நாட்டின் முன்னணி மென்பொறியியல் நிறுவனமான ஜோஹோவை நிறுவிய ஸ்ரீதர் வேம்பு நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணம், ஒன்றரை லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சமாக உயர்த்தப்பட்டது குறித்து பேசினார்.
இனி அமெரிக்காவை நம் நாடு நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐடி துறை மட்டும் சார்ந்திருக்காமல் மருத்துவம், ராக்கெட் உள்ளிட்ட பல துறைகளையும் இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
September 21, 2025 10:23 PM IST