ஆயுர்வேதத்தின்படி, அரிசி குளிர்ச்சியான மற்றும் மென்மையான தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக சில மாதங்கள் சேமித்து வைக்கப்படும் பழைய அரிசி செரிமானத்திற்கு எளிதானதாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி சற்று கடினமானதாகவும், பதப்படுத்த அரிசி மிகவும் கடினமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. பொதுவாக இரவில் உடலின் செரிமானம் பலவீனமாக இருப்பதால், அந்த நேரத்தில் அரிசி உணவு சாப்பிடுவது வாயு, அஜீரணம் மற்றும் கனமான உணர்வுக்கு வழிவகுக்கக்கூடும்.

அரிசியில் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்றபோதிலும், இரவில் உடலில் வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும் என்பதால் நம் உடல் அரிசி உனவுகளை முழுமையாக ஜீரணிக்க போராடும். இது உப்புசம், அசிடிட்டி அல்லது கொழுப்பு குவிய வழிவகுக்கும். குறிப்பாக ஒருவர் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், அவர் சாப்பிட்ட அரிசி உணவு மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டில் உள்ள பயன்படுத்தப்படாத ஆற்றல், உடலில் கொழுப்பாக சேரும். இது படிப்படியாக எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட அபாயங்கள் இருக்கிறது என்றாலும் இரவில் சாதத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அரிசி உணவு மிதமாகவும், சரியான வடிவத்திலும் சாப்பிடும்போது, அது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. பயத்தம் பருப்பில் கிச்சடி, சீரக சாதம் அல்லது வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கப்பட்ட சாதம் போன்ற லேசான உணவுகள் ஜீரணிக்க எளிதானவை மற்றும் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
நீங்கள் இரவில் சாதம் சாப்பிட விரும்பினால், அதை ஆரோக்கியமாக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
– செரிமானத்தை தூண்ட நீங்கள் அரிசி உணவை சாப்பிடும் முன் வெதுவெதுப்பான நீர் அல்லது லேசான சூப் குடிக்கவும்.
– பழுப்பு அரிசி அல்லது பழைய அரிசியை சாப்பிட தேர்வு செய்யவும், ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து அதிகமாகவும், ஸ்டார்ச் குறைவாகவும் இருக்கும்.
– எளிதாக செரிமானமாகவும், வாயுவை குறைக்கவும் உங்கள் அரிசி உணவில் சிறிது நெய் சேர்க்கவும்.
– அரிசி உணவை சாப்பிட்ட பின் கனமான உணர்வு ஏற்படுவதை தடுக்க இரவு உணவிற்குப் பிறகு 5-10 நிமிடங்கள் ஒரு சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
– செரிமானத்திற்கு போதுமான நேரத்தை அளிக்க தூங்க செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள்

இரவில் சாதம் என்பது, தென்னிந்தியாவில்தான் பரவலாக காணப்படுகிறது. என்றபோதிலும் தென்னிந்தியர்கள் எடை சார்ந்த பிரச்னைகளை பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இதற்கு காரணம் தென்னிந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் உள்ள முக்கியமான மற்றொரு பழக்கம். அது வழக்கமாக தயிர், சாம்பார் அல்லது வேகவைத்த காய்கறிகளுடன் சாதத்தை சேர்த்து சாப்பிட்டுவிட்டு, உணவுக்குப் பிறகு சுறுசுறுப்பாக இருப்பது. மேலும், குளிர்ந்த அரிசி ரெஸிஸ்டன்ட் ஸ்டார்ச்சை (Resistant Starch எனப்படும் சிறுகுடலில் செரிமானம் ஆகாமல், பெருங்குடலை அடைந்து அங்கு நொதித்தல் செயல்முறையைத் தூண்டும் ஒருவகை மாவுச்சத்து) உருவாக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் செரிமானம் சிறப்பாக இருக்க உதவும்.
October 30, 2025 1:17 PM IST
[]
Source link






