Last Updated:
இந்தியா அணு ஆயுத சோதனை மற்றும் தேசிய பாதுகாப்பு முடிவுகள் மற்ற நாடுகளின் அழுத்தம் இல்லாமல், நாட்டின் நலனுக்காகவே எடுக்கப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில் இந்தியா வேறு நாட்டின் கட்டளைக்கோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது. நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசு முடிவுகளை எடுக்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடனான பிரத்யேக பேட்டியில் அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விரிவான விளக்கத்தை கொடுத்தார். மேலும், பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு எனும் தகவல்களையும் நிராகரித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில், அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தும் எனத் தெரிவித்தது தொடர்பாகவும், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துகிறது எனக் கூறியது தொடர்பாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “இந்தியா என்ன செய்யும் என்பதை எதிர்காலம் சொல்லும். அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் செய்வதன் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்படாது. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யலாம். சரியான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்வோம்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ.விடமிருந்து போர் நிறுத்தம் கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகும் கூட, நாம் அடைய வேண்டியதை அடைந்த பிறகே நமது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தோம். தேவை ஏற்பட்டால் நாம் அதனை மீண்டும் செய்வோம்” என்று திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கு வகித்தாரா என்று கேட்டபோது, “போர் நிறுத்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மட்டுமே இருந்தது. எந்த மூன்றாம் தரப்பினரும் இதில் ஈடுபடவில்லை” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
November 07, 2025 4:30 PM IST
[]
Source link







