
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலமான மே மாதத்திலேயே சாரல் மழை களைகட்டியது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் மாத தொடக்கத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று (ஜூன் 13) காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 38.40 மி.மீ., செங்கோட்டையில் 22 மி.மீ., அடவிநயினார் அணையில் 15 மி.மீ., கருப்பாநதி அணையில் 6 மி.மீ., ராமநதி அணையில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 2 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ள நிலையில், கடனாநதி அணை நீர்மட்டம் 69.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 77.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.93 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 104.25 அடியாகவும் உள்ளது. மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை இரவு முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டது.