
நாமக்கல்: கோடை விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நேற்று அதிகரித்து இருந்தது. நாமக்கல்-சேலம் மாவட்ட எல்லையில் கொல்லிமலை அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளுக்குச் சென்று நீராடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், கொல்லிமலை உட்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த இரு நாட்களாகக் கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் மலையின் பல்வேறு இடங்களைக் கண்டு ரசித்ததுடன், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.