
சென்னையில் ஏழை, நடுத்தர மக்களின் சுற்றுலா தளமாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இங்கு பொழுதைப் போக்க பல ஆயிரம் முதல் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். குறிப்பாக, வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து செல்வார்கள். தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரைக்கு சிறுவர், சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் மக்கள் வருகை தருகின்றனர். அதிலும், மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு மத்தியில் அங்கும் இங்கும் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கால்நடைகள் புகுந்து மிரள வைக்கிறது. பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் வறுத்த மக்காச்சோளம் மற்றும் திண்பண்டங்களை சாப்பிடவிடாமல் பின்தொடர்கிறது. இதனால், மக்கள் பதற்றம் அடைந்து ஓடும் நிலை உள்ளது.
இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: கோடைவிடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்க மெரினா கடற்கரை வந்தோம். ஆனால், இங்கு கால்நடைகள் எங்கள் பக்கம் வந்து ஒருவித அச்சத்தை உருவாக்கிவிட்டது. கையில் வைத்திருக்கும் மக்காச் சோளத்தை நுகரவருகிறது. அதை கொடுக்காவிட்டால், நம்மை துரத்துகிறது. சிறுவர், சிறுமி, குழந்தைகளை அழைத்து கொண்டு மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
எனவே, கால்நடைகளை சுற்றித்திரிய விட்டுள்ள உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையில் பொது இடங்களில் அல்லது சாலைகளில் கால்நடைகளை சுற்றி திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆனால், இதை உரிமையாளர்கள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை, எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மெரினா கடற்கரையில் பொழுதை கழிக்க வருபவர்களின் பாதுகாப்பை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.