
குன்னூர்: குன்னூர் லெவல் கிராசிங் அருகே மலை ரயில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து தடைப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டுநர்கள் அவதியுற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் குன்னூர் வந்த மலை ரயில் இஞ்சின் கோளாறு காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நிறுத்தி மெதுவாக இயக்கப்பட்டு வந்தது. பொதுவாக, குறிப்பிட்ட நேரங்களில் மலை ரயில் குன்னூர் வந்து சேரும். ஆனால், இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தது.
மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் இந்த மலை ரயில் மீண்டும் பழுதாகி நின்றது. இதனால், சாலையில் வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. எனவே கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வரும் மலை ரயிலை பராமரித்து தடையில்லாமல் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் வலியுறுத்தினர்.