
Last Updated:
நடிகர் விஜய் கொடைக்கானலில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் பங்கேற்க, மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் கொடுத்த வரவேற்பில்,அவரது கார் சேதமடைந்தது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு நடிகர் விஜய் தீவிர அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் தனது திரை வாழ்க்கையில் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் நடிகர் விஜய் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் நிலையில் அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது.
தற்போது இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு, கொடைக்கானலில் இரு தினங்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம், மதுரை விமானநிலையத்திற்கு சென்றார். பின் அங்கிருந்து கொடைக்கானல் நோக்கிப் புறப்பட்டார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய், “கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். மதுரை மண்ணில் மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். இன்று ஒரு மணி நேரம் உங்களைப் பார்த்துவிட்டு சென்றுவிடுகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். என் வண்டிக்கு பின்னாடி, வேகமாக பைக்கில் வரவோ, ஹெல்மெட் போடாமல், பைக்கில் நின்றுகொண்டோ வரவேண்டாம். அப்படியான காட்சிகளைப் பார்க்கவே மனதிற்கு பதட்டமாக இருக்கிறது” எனத் தெரிவித்துவிட்டு மதுரைக்கு புறப்பட்டார்.
இதனையடுத்து மதுரை விமானநிலையம் சென்றடைந்த விஜய்க்கு அங்கு திரண்டிருந்த அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து வெளியேவந்த விஜய், சிறிது தூரம் தனது வாகனத்தின் மேற்பகுதியை திறந்து நின்றபடி ரசிகர்கள் அளித்த வரவேற்பை பெற்றார்.
அதனை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட அவரது வாகனத்தை ரசிகர்களும், தொண்டர்களும் பின் தொடர்ந்து சென்றனர். இந்நிலையில், வரவேற்பின்போது, விஜய் பயணித்த வேன் மீது ரசிகர்கள் ஏற முயன்றனர். இதனால், அந்த வேனின் முன்பகுதி சேதமடைந்தது.
[]
Source link