
Last Updated:
ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்களை சந்திக்க உள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர்.
இதையும் படியுங்கள் : அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக மூன்று நாள் டெல்லி சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரைச் சந்தித்தும் அவர் ஆலோசனையில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை, நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது” எனும் கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணமும், இதில் அவர் பிரதமர் முதல் மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரை சந்திக்க இருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
April 17, 2025 6:25 PM IST
உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு: துணை குடியரசுத் தலைவர் சொன்ன கருத்து.. ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்
[]
Source link