
Last Updated:
தென்னிந்தியாவில் இருந்து இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள் ஏராளம். அதில், ஸ்ரீதேவி, ரேகா, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோர் முக்கியமான நடிகைகள்.
தென்னிந்தியாவில் இருந்து இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்கள் ஏராளம். அதில், ஸ்ரீதேவி, ரேகா, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோர் முக்கியமான நடிகைகள். ஆனால், இந்தி திரையுலகில் ஜொலிக்க முடியாத நடிகை ஒருவர், தென்னிந்திய சினிமாவில் அங்கீகாரம் பெற்று, முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.
அவர்தான் கோமல் மஹுவாகர் எனப்படும் ரூபிணி. படிப்பறிவு மிகுந்த குடும்பத்தில் பிறந்த ரூபிணி எதிர்காலத்தில் பெரிய மருத்துவராக வேண்டும் என்று நினைத்தார். ஆனால், விதி அவரை பெரிய நடிகையாக மாற்றிவிட்டது.
1975ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய “மில்லி” என்ற திரைப்படத்தில் 6 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு “கோத்வால் சாப்”, “தேஷ் பரதேஸ்”, “கூப்சுரத்” ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
டீன் ஏஜ் பருவத்தை அடைந்ததும் குணசித்திர வேடங்களில் நடித்த ரூபிணி, “குங்ரூ”, “மேரி அதாலத்”, “ஆவாரா பாப்” உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். ஆனால், இந்த படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. இதனால், கடும் ஏமாற்றம் அடைந்த ரூபிணி, தென்னிந்திய திரையுலகை நோக்கி வந்தார்.
1987ஆம் ஆண்டில் ரஜினியின் “மனிதன்” படத்தில் தமிழில் அறிமுகமாகி, அதே ஆண்டில் விஜயகாந்தின் “கூலிக்காரன்”, மோகனின் “நினைக்கத் தெரிந்த மனமே”, கமலின் “தீர்த்த கரையினிலே” என 4 படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் ஸ்டார் ஹீரோக்களுடன் முன்னணி நடிகையாக வலம் வந்த ரூபிணி, 1995 ஆம் ஆண்டில் தொழிலதிபர் மோகன் குமாரை மணந்தார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு முழுக்குப் போட்ட நடிகை ரூபிணி, மும்பையில் “யுனிவர்சல் ஹார்ட் ஹாஸ்பிடல்” என்ற பெயரில் மருத்துவமனையைத் தொடங்கி, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 2005ல் மீண்டும் இந்தி திரையுலகிற்கு சென்ற அவர், “வோ ரெஹ்னே வாலி மெஹ்லோன் கி” என்ற பிரபல இந்தி தொடரில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தமிழில் “சித்தி 2” தொடரில் நடித்தார்.
April 10, 2025 12:22 PM IST
[]
Source link