
Last Updated:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் அரசியல் பின்னணி குறித்து பார்க்கலாம்….
ஈரோட்டில் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வரும் வி.சி.சந்திரகுமார், பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு திமுக வார்டு பிரதிநிதியாக இருந்த அவர், விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் செயலாற்றி வந்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கியதும், அவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான வி.சி.சந்திரகுமார், தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியாக பிரிக்கப்பட்டதும், தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற வி.சி.சந்திரகுமார், அந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை பெற்றார். இதனை தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்த்ததால், அதிருப்தி அடைந்த வி.சி.சந்திரகுமார், தனது ஆதரவாளர்களுடன் மக்கள் தேமுதிக என்ற அமைப்பை தொடங்கினார்.
அந்த தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார். அதன் பிறகு, மக்கள் தேமுதிக அமைப்பை கலைத்த வி.சி.சந்திரகுமார், திமுகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியின் கொள்கை பரப்பு அணியின் மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2017- ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராக செயல்பட்டார். ஆனால் அத்தேர்தலில் 13.94 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று திமுக டெபாசிட் இழந்தது. இதனை தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் முழு நேர தேர்தல் பணி மேற்கொண்ட சந்திரகுமார், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
January 11, 2025 6:22 PM IST
[]
Source link