
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றது. ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சீசன் நாட்களைத் தவிர சாதரண நாட்களில் நாளென்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலாப் பயணிகள் சிம்ஸ் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் உள்ள நிலையில், பூங்கா சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் மே மாதம் நடைபெற உள்ள கோடை சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் 1,000-க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் தொட்டியில் நடவு செய்யபட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும். குறிப்பாக, அங்கு நடவு செய்யப்பட்டுள்ள பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.