Last Updated:
மத்திய அரசு திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் இருப்பதால், நல்ல திட்டமாக இருந்தாலும் மக்கள் அதை புரிந்து பயன்பெற முடியாத சூழல் நிலவுகிறது.
மத்திய அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் தொடர்பான அறிவிப்புகள் பெரும்பாலும் இந்தி மொழியிலேயே முதலில் வெளியிடப்படுவது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்களுக்கு அந்த திட்டங்கள் முழுமையாக பயன்படாமல் போகும் நிலையை உருவாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் இணையதளங்கள், விளம்பரப் பிரச்சாரங்கள், ஆன்லைன் விண்ணப்ப தளங்கள், சமூக ஊடக அறிவிப்புகள் ஆகியவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறுவதால், இந்தி அல்லது ஆங்கிலம் அறியாத கிராமப்புற மக்கள், முதியோர், சிறு விவசாயிகள் போன்றவர்கள் திட்டங்களின் விவரங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை தமிழ் மக்களிடம் சென்றடையாமல், காகித அறிவிப்பாகவே கடைசி வரையும் இருந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் பல திட்டங்களில் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழியில் முழுமையான வழிகாட்டுதல் இல்லாதது பெரும் தடையாக உள்ளது. “திட்டம் நல்லதாக இருந்தாலும், அதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அது எங்களுக்கு எப்படிப் பயன் தரும்?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலைமை குறித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “மொழி திணிப்பாக இல்லாமல், மொழி சமத்துவமாக இருக்க வேண்டும்” என்பதே தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
தற்பொழுது தமிழில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் பராசக்தி என்னும் படம் 1937 முதல் 1940 நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இளைஞர்கள் தமிழ் மொழிக்காக எவ்வளவு போராடினார்கள் என்பது குறித்தான சில முக்கிய காட்சிகளை படமாக காட்சிப்படுத்தியது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போராடி வென்ற தமிழ் மொழி வருங்காலங்களில் அழிந்துவிடக் கூடாது என மக்களின் மன நிலையாகவே உள்ளது. மொழி புரியாததால் ஒரு திட்டம் பயன் தரவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் தோல்வியே என கருத்து நிலவி வருகிறது.
மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது.




