Last Updated:
“மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
சென்னை வந்துள்ள மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
சென்னை ஐஐடி-யில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொண்டாடினார். வேட்டி சட்டையில் கலந்துகொண்ட அவர், பொங்கல் வைத்ததுடன், உறியடி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஐஐடி பணியாளர்கள் பங்கேற்ற கோலப்போட்டியை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் அடுத்த மாதத்தில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொடர்ந்து மாலை துக்ளக் 56வது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாட்டிற்கு ஒரு முக்கிய பொருளாதார நுழைவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை. மூன்று மொழிகளைக் கற்பது ஒருவரின் தாய்மொழிக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது” எனப் பேசியுள்ளார்.
“மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்







