Last Updated:
அப்பாவி மக்களின் பெயரில் கடன் வாங்கி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். நூதன மோசடியின் பின்னணி என்ன?
பொதுமக்களின் பான் கார்டு, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களைப் பெற்று, போலி வங்கிக் கணக்கு துவங்கி, பல கோடி ரூபாய் கடன் பெற்று, நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஒருவரின் பெயரில் கடன் வாங்கி சொகுசாக வாழ்ந்தவர்கள் போலீசில் சிக்கியது எப்படி?அப்பாவி மக்களின் பெயரில் கடன் வாங்கி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். நூதன மோசடியின் பின்னணி என்ன?
சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்கள் சிலர் சேர்ந்து ஒரு புகார் அளித்திருந்தனர். அதில், அவர்களுக்கு தெரியாமல் அவர்களது பெயரில் வங்கி கடன் வாங்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது கடனை கட்டச்சொல்லி, குண்டர்கள் சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து புகார் அளித்ததன்பேரில் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் SHAYAM HYPER ஃபைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவந்த சாரா என்கிற ஜோஸ்பின் பியூலா சிக்கினார். இவர் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வாங்கி தரப்படும் எனக்கூறி விளம்பரம் செய்துள்ளார். இதனை அறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சாராவை அணுகி வங்கிக் கடன் கேட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் மற்றும் பல்வேறு ஆவணங்களைப் பெற்று வங்கிகளில் கணக்கு துவங்கி அதன் மூலம் கடன் வாங்கி உள்ளார் ஜோஸ்பின் பியூலா. ஆனால், வங்கிக் கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுக்காமல், அவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து செலவு செய்துள்ளனர்.
பொதுமக்களை ஏமாற்றி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் பெயரில் செல்போன் எண்ணை வாங்கி, வங்கி கணக்குடன் இணைத்துவிட்டு, ஓடிபி போன்றவற்றை ஜோஸ்பின் பியூலாவும் அவரது கூட்டாளிகளுமே மேனேஜ் செய்துள்ளனர். இப்படி பலரது பெயர்களில் அவர்களுக்கே தெரியாமல் வங்கிக் கடன் வாங்கி, ஜோஸ்பின் பியூலாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். இப்படி மோசடியாக பெறப்பட்ட பணத்தை வட்டிக்கு விட்டு மேலும் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜோஸ்பின் பியூலா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Jan 09, 2026 10:22 PM IST







