Last Updated:
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு, திரையரங்குகளில் வீணாகுமா? என்றும் ரசிகர் மன்றங்களின் பெயரில், ஏழை மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறதா?என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கேள்வி எழுப்பியுள்ளார்.
“எந்த நடிகரின் படமாக இருந்தாலும், எந்தத் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், திரையரங்கிற்குள் மட்டுமல்ல, வெளியிலும் ரசிகர் மன்றம் என்ற பெயரிலும், சிறப்பு காட்சி என்ற போர்வையிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி ஒரு ரூபாய் கூட பெற அனுமதிக்க கூடாது” என தமிழக அரசை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த காலங்களில் திரைப்படம் ஏழை மக்களின் வாழ்வில், சில மணிநேரப் பொழுதுபோக்குக்கான கலைப்படைப்பாக இருந்தது. இன்று அதே திரைப்படம், மக்களின் கண்ணீரை விலைப்பட்டியலாக்கும் கொடூர வணிகமாக மாற்றப்பட்டுள்ளது.
இரசிகர் என்ற பெயரில் உணர்ச்சியைத் தூண்டி, ஆர்வம் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மதிக்காமல், ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் அதற்கும் மேலான விலை வைத்து டிக்கெட்டுகளை விற்கும் வணிக மோசடி நடைபெறுகிறது. இது வெறும் வணிகமல்ல. ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமை மீது நடத்தப்படும் பகற்கொள்ளை.
ஒரு நடிகரின் புகழும், ஒரு திரைப்படத்தின் ஆரவாரமும், மக்களின் வறுமையைக் காசாக்கும் விதமாகவே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் உழைத்து வாழ்க்கையை நடத்திச் செல்லும் சாதாரண மக்கள், ஒரு படம் பார்க்கவே கடன் வாங்க வேண்டிய நிலை, இந்த மண்ணில் உருவாகியிருக்கிறது.
எந்த நடிகரின் படமாக இருந்தாலும், எந்தத் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், திரையரங்கிற்குள் மட்டுமல்ல, வெளியிலும் ரசிகர் மன்றம் என்ற பெயரிலும், சிறப்பு காட்சி என்ற போர்வையிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி ஒரு ரூபாய் கூட பெற அனுமதிக்க கூடாது.
மக்களின் உணர்வை பணமாக மாற்றும் இந்த திரைப்படக் கொள்ளைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் பணம் குவிக்கும் சந்தை அல்ல. உரிமையோடு வாழ வேண்டியவர்கள். மக்களைச் சுரண்டும் இந்த அநியாய வணிகத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சமூக அவலத்தை, தமிழ்நாடு அரசு கண்டும் காணாமல் மௌனமாக இருந்தால், அந்த மௌனம் கூட மக்களுக்கு எதிரானதே ஆகும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திரையரங்குகளுக்கும், ரசிகர் மன்றங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா? என்பதனைக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







