Last Updated:
தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் பரபரப்பாக எழுந்துள்ள நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அக்கட்சி தலைமைக் கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய பிரேமலதா, இயேசு போன்று கருணை உள்ளத்தோடு விஜயகாந்த் வாழ்ந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைக்கு அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகள்தான் கூட்டணி. அந்தக் கட்சித் தலைவர்களுடன் அன்று ஆலோசனை நடைபெற்றது. இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை நிச்சயம் உரிய நேரம் வரும்போது நாங்கள் அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று மாலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் தலைமைக் கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வந்தனர்.
விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே. சுதீஷ், “இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளோம். அரசியல் குறித்து பேசவில்லை. முதலமைச்சரை சந்தித்தும் அழைப்பு கொடுக்க இருக்கிறோம். கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
[]
Source link





