Last Updated:
ஆற்காடு நவாப் முகமது அலி, தவெக கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பும், இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்றும் பாராட்டியிருக்கிறார்.
உலகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆற்காடு நவாப் முகமது அலி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், என் மகனின் பெயர் ஜீசஸ். அவரது பெயர் இசா. மூத்த மகனின் பெயர் ஆபிரகாம். எங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மீதும், மேரி மாதா மீதும் நம்பிக்கை இருக்கிறது. நானும் விஜய்யின் உடை நிறத்திலேயே இன்று ஆடை அணிந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
விஜய் பணிவும், மனிதநேயமும் கொண்டவர். பாஸுக்கும், தலைவருக்கும் வித்தியாசம் இருக்கின்றது. பாஸ் என்பவர் பெரிய இருக்கையில், தன்னை நம்பியவர்கள் மத்தியில் அமர்ந்திருப்பார். ஆனால் தலைவர் என்பவர் மக்களை வழிநடத்தி முன் செல்வார். இந்த மேடையில் அனைவரும் எந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறோமோ, அதே வகையான இருக்கையில் தான் அவரும் அமர்ந்துள்ளார்.
சிறந்த நடிகரான அவருக்கு பெயர், புகழ், பணம் அனைத்தும் இருந்தும் கூட, அவர் தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளார். எந்த மதமானாலும், அதில் வேற்றுமை பல இருக்கின்றன. ஆனால் அனைத்திலும் மனிதம் எனும் ஒற்றுமை இருக்கிறது. அதைத் தான் கிறிஸ்துவமும் வலியுறுத்துகிறது.
நான் படித்த பள்ளியும், கல்லூரியும் கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் தான். அமைதி நிறைந்த மதத்தில் கிறிஸ்துவம் இருக்கிறது. எங்கள் ஆற்காடு நவாப் குடும்பம் ஆட்சியில் 340 இந்துக் கோயில்களையும், 100க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் கட்டியுள்ளோம்.
ஜென்-சி தலைமுறையினருக்கு விஜய் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகவும், அவர்களை இழுக்கும் சக்தியாகவும் இருக்கிறார்.
ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு நமது தமிழ்நாடு. எந்த மத நம்பிக்கைக் கொண்டவராக இருந்தாலும் இங்கு மதிக்கப்படுவார். மக்கள் அதிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
“தமிழ்நாடு; பெண்களுக்குப் பாதுகாப்பு.. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்..” – தவெக மேடையில் ஆற்காடு நவாப் பேசியது என்ன?
[]
Source link






