Last Updated:
உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னையில் பாரிமுனை மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரம் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், என்.எஸ்.சி. போஸ் சாலையில், சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், சாலையோர வியாபாரம் தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.
என்.எஸ்.சி. போஸ் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக் கூறிய நீதிபதிகள், இந்த சாலையோரம் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்கும்படி, மாநகராட்சி ஆணையருக்கு, உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளும் வியாபாரம் செய்யக்கூடாத சாலைகளாக இதுவரை அறிவிக்கவில்லை என்றால், அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Dec 20, 2025 11:52 PM IST





