Last Updated:
திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி அருகே அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் மோகித் நேற்று பிற்பகல் மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியில் கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தான்.
அப்போது, கைப்பிடிச் சுவர் திடீரென சரிந்து மோகித் மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மாணவரின் குடும்பத்திற்கு அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளது.
மாணவரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி அரசு மருத்துவமனையில் மாணவனின் உறவினர்களிடம் எம்எல்ஏ சந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து குடும்பத்தை சந்தித்து விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சம்பவம் தெரியவந்ததும், முதலமைச்சர் மூன்று முறை போன் செய்து விசாரித்தார். 2014 – 2015ஆம் ஆண்டு நபார்டு நிதியில் பள்ளிகள் கட்டப்பட்டன.
சம்பவம் நடந்தப் பகுதி பாதுகாப்பற்ற பகுதி என அங்கு கட்டுமானப் பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தப் பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. பிறகு மாணவர்கள் அது பாதுகாப்பான பகுதிதான் என கருதி அந்த இடத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வைக்கும் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று அதனை சரி செய்து கொடுப்பது எங்கள் கடமை. அதேபோல், இறந்த மாணவருக்கு சகோதரன் இருக்கிறார். அவரது கல்வி தொடர்பான அனைத்து தேவைகளையும் அரசு ஏற்று நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் மீது ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
December 17, 2025 4:13 PM IST
[]
Source link






