புதுச்சேரி: புதுச்சேரியில் 199 ஆண்டுகள் பழமையான தாவரவியல் பூங்கா ரூ.9.11 கோடி மதிப்பில் புனரமைக்கப் பட்டுள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் ஒட்டி தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா ரூ.9.11 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து காண்டு பூங்காவை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்தப் பூங்கா தொடர்பான குறிப்பேட்டையும் வெளியிட்டார். சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எம்எல்ஏ அனிபால் கென்னடி, வேளாண் துறை செயலர் யாசின் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூங்கா நுழைவு வளைவு, அழகான லில்லி குளம் மற்றும் உள்ளிட்ட நீரூற்றுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் இசைக்கு ஏற்றவாறு நீரூற்று உயரமாகவும், தாழ்வாகவும் எழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் டீசல் ரயில் மாற்றப்பட்டு ரூ.1.16 கோடி செலவில் நவீன பேட்டரியில் இயங்கும் புதிய மகிழ் ரயில் விடப்பட்டள்ளது.
பூங்காவை சுற்றியும் ரயில் பாதை அமைக்கப்பட்டு குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயணம் செய்து ரசிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயங்கிய பழைய டீசல் ரயில் பூங்காவினுள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வரும் முதியோர், பெண்கள், குழந்தைகள், இயலாதோர் ஆகியோருக்காக 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தவிர குழந்தைகளுக்கு என்று விளையாடும் பகுதியும் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தாவரவியல் பூங்கா குறித்து வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பார்வையாளர் மையமும் இங்கு உள்ளது. தட்ப வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி அலங்காரச் செடிகள் மற்றும் அழகு செடிகள் வளர்ப்புக்காக இங்கு பசுமை குடில் ஒன்று இருக்கிறது.
அரிதான கற்றாழைச் செடிகளைப் பாதுகாக்கும் வகையில் கண்ணாடி இல்லம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையையொட்டி மலர் படுகையும், மேலும் ஹெர்பேரியம் தயாரிக்கும் தாவரவியல் மற்றும் உயிரி அருங்காட்சியகம், வனத்துறை, இயற்கை தொடர்பான மாணவர்க ளுக்கு உகந்த இடமாகவும் இந்தப் பூங்கா உள்ளது. இதைத் தவிர இந்தப் பூங்காவில் மீன் அருங்காட்சியகமும் இருக்கிறது. பார்வையாளர்கள் பல்வேறு வண்ணங்களில் இங்கு மீன்கள் நீந்துவதைக் காண முடியும். செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாவரவியல் பூங்கா கடந்த 1826ம் ஆண்டில் அப்போதைய பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இது இந்தியாவில் முக்கியமான சில தாவரவியல் பூங்காக்களில் ஒன்று. புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் சிறந்த இடமாக இந்த தாவரவியல் பூங்கா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண விவரம்: தினந்தோறும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். பெரியவர்களுக்குக் கட்டணமாக ரூ.20, சிறுவர்களுக்குக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். வெளிநாட்டவர்களுக்கு ரூ.50, கல்வி நிறுவனத்தால் அத்தாட்சி பெற்று வரும் மாணவர்களுக்குக் கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும். மகிழ் ரயிலுக்குக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இசை நடன நீரூற்று (மியூசிக்கல் டேன்சிங் பவுன்டைன் ) நிகழ்வு நடைபெறும். மாலை 6.30 மற்றும் 7 மணி என இரண்டு காட்சிகள் இடம்பெறும். கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது.




