திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள ஆபத்தான அஞ்சு வீடு அருவி மற்றும் வன அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் உள்ள புல்லாவெளி அருவி மற்றும் இடையக்கோட்டையில் உள்ள நங்காஞ்சியாறு அணை பகுதியில் ரூ.4.8 கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை, அக்.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதேபோல், திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையிலும் ரூ.10 கோடியிலும், கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவியிலும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் உள்ள ஆபத்தான அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளை பார்வையிடுவதற்காகவும், குளிப்பதற்காகவும் சென்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால், அந்த அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வனத்துறை மற்றும் வருவாய்த்துறை வசமுள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்கு சென்று பார்வையிட மற்றும் குளிப்பதற்கு முயற்சிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதோடு, அந்த அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.






