கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.
இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் இன்று காலை தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2,00க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், “தமிழ்நாடு டிஜிபி தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். எப்பவேண்டுமானாலும் மாற்றப்படலாம் என இருக்கும் டிஜிபி, எப்படி உறுதியான முடிவை எடுப்பார். மேலும், எப்பவேண்டுமானாலும் மாற்றப்படலாம் என இருக்கும் டிஜிபியின் பேச்சை மற்ற காவல்துறை அதிகாரிகள் எப்படி கேட்பார்கள்.
அதுமட்டுமின்றி, காவல்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லை. இதெல்லாம் தான் குற்றங்கள் நடப்பதற்குக் காரணம். ஆனால், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு இதை எல்லாம் பார்க்க நேரமிருக்காது. அதேசமயம், சினிமாவை பார்த்து விமர்சனம் சொல்வதற்கு நேரம் இருக்கும்.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான் அமைச்சர் கே.என். நேரு. ஒப்பந்தங்களில் கோடி கணக்கில் ஊழல் செய்வதுபோதாது என்று, ஏன் கடினமாக படித்து தேர்வு எழுதுபவர்களிடத்திலுமா ஊழல் செய்வீர்கள்.
ஐயா ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து திராவிட மாடல் ஆட்சி என சொல்லி திராவிட தலைவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் வேண்டுமென்றால் ஸ்டாலின் மாடல் ஆட்சி என சொல்லிக்கொள்ளுங்கள், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
முதலமைச்சர், துணைமுதலமைச்சர் முதல் எம்.எல்.ஏ. வரை திமுகவினர் எந்தக் கூட்டத்திற்கு சென்றாலும், பெண்களுக்கு ரூ. 1000 வருகிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. அதனைத்தான் அவர்கள் ஆட்சியின் சாதனையாகவும் சொல்லிவருகிறார்கள். இலவச பஸ், பெண்களுக்கு ரூ. 1000, பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 இந்த இலவசங்களைத் தவிர திமுக வேறு எதாவது உருப்படியான திட்டம் கொண்டுவந்துள்ளதா?
இந்தப் பணத்தையும் கூட திமுக கோடி கோடியாக வைத்திருக்கும் தனது அறக்கட்டளையில் இருந்து கொடுத்தால் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இது அரசு நிதி. ஒரு கட்சி பெண்களுக்கு ரூ. 1000 என்கிறார்கள், மற்றொரு கட்சி ரூ. 2,000 என்கிறது. இலவசம் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுப்பது அரசின் கடமை. ஆனால் இதனைவைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
ஒரு தொகுதிக்கு ரூ. 30 முதல் 40 கோடி செலவு செய்து வெற்றி பெற்றால் அவரால் நிச்சயம் நல்லாட்சி தரமுடியாது. எனவே நீங்கள் இந்த 1,000 ரூபாயை தியாகம் செய்யுங்கள். நிச்சயம் 2026 நமது தலைவர் தலைமையில் நல்லாட்சி அமையும்” என பேசினார்.
November 05, 2025 3:45 PM IST
[]
Source link






