
Last Updated:
மதுரைக்கிளை உயர் நீதிமன்றம், கோவில் விழாக்களின் அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கோவில் விழாக்களின் அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் பல்வேறு சமூகத்தினரால் நிறுவப்பட்டதாகவும், அக்கோவில் திருவிழா அழைப்பிதழில் தங்கள் சமூகத்தின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிராமத்தில் உள்ள பெரிய ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சமூகம் வெளிப்படையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனிடையே, குறிப்பிட்ட சமூகத்தினர் திருவிழாவில் பங்கேற்பதற்கும், வழிபடுவதற்கும் எவ்வித தடையும் இல்லையென அறநிலையத்துறை சார்பில் வாதிடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி அக்கருத்தை ஏற்கவிரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கி கோவில் திருவிழாக்களை கொண்டாட வேண்டும் என்றனர்.
வரும் காலங்களில் இக்கோவில் விழாக்களின் அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது என உத்தரவிட்டு, தேவைப்பட்டால், நன்கொடையாளர்களைப் பாராட்டி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் சான்று அனுப்பலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
March 02, 2025 3:50 PM IST