
Last Updated:
சென்னையில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தில் வீரக்குமார் – லட்சுமி தம்பதி குடும்பத்துடன் வசித்து வந்தனர். கடந்த வாரம் செவ்வாய்கிழமை வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டதால், புதிதாக இருந்த வேறொரு சிலிண்டரை லட்சுமி மாற்றினார். அப்போது, வால்வு சரியாக இல்லாததால் கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கேஸ் சிலிண்டரை மாற்றிய சிறிது நேரத்தில், வீட்டில் பூஜை செய்வதற்காக லட்சுமி, தீபம் ஏற்றச் சென்றார். அதற்காக தீக்குச்சியை லட்சுமி உரசிய போது பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. உடலில் தீப்பற்றியதால், லட்சுமியும், அவரது கணவர் வீரக்குமாரும் அலறினர்.
அவர்களை காப்பாற்ற முயன்ற மருமகன் குணசேகரனும் பலத்த தீக்காயம் அடைந்தார். பலத்த காயமடைந்த 3 பேரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chennai,Tamil Nadu
February 12, 2025 7:58 AM IST