
சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், குற்றாலம், மைசூரு, பெங்களூரு, மூணாறு ஆகிய இடங்களுக்கு 3 நாள் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுற்றுலா துறை ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடைகாலத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு – ஒகேனக்கல், மைசூரு – பெங்களூரு, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு 3 நாள் சுற்றுலா பயண திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த சுற்றுலா திட்டங்கள் ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து இந்த பேருந்துகள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாலை அல்லது இரவு புறப்பட்டு, தி்ங்கள்கிழமை காலை சென்னை திரும்பும். சுற்றுலா தலங்கள் மற்றும் அங்கு பார்வையிடும் இடங்கள் விவரம்:
ஊட்டி: தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம்.
கொடைக்கானல்: தூண் பாறை, பசுமை சமவெளி, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் நட்சத்திர ஏரி படகு குழாம், வெள்ளி நீர்வீழ்ச்சி.
ஏற்காடு – ஒகேனக்கல்: ஏற்காடு ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பகோடா பாயின்ட், ரோஸ் கார்டன், ஏற்காடு படகு குழாம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.
மைசூரு: பெங்களூரு: சாமுண்டீஸ்வரி கோயில், நந்தி, மைசூரு அரண்மனை, பிருந்தாவனம் கார்டன், ஸ்ரீரங்கப்பட்டணம், திருப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா.
குற்றாலம்: குற்றாலம் நீர்வீழ்ச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை.
மூணாறு: மூணாறு மறையூர் புத்துணர்ச்சி முகாம், இரவிகுளம் வனவிலங்கு சரணாலயம், பிளாஸம் பார்க்.
இந்த சுற்றுலா திட்டங்களில், தங்கும் வசதி மற்றும் 6 வேளை உணவு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் வழங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து, வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய சொகுசு பேருந்துகள் இயக்கப்படும்.
இத்திட்டங்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இணையதளத்திலும் (www.ttdconline.com), சென்னை வாலாஜா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரிலும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் அறிய 7550063121 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.