
Last Updated:
Sexual Harassment: அலுவலகத்திற்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து இருந்தார். அதன்பேரில் பணி கேட்டுச் சென்ற பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.
வேலைக்கு நேர்காணலுக்கு வந்த இளம் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசி, ஆபாச செயலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலை குமரன் மருத்துவமனை அருகில் கணேஷ் என்டர்பிரைசஸ் என்கின்ற பெயரில் தனியார் பெயிண்ட் வர்ணம் பூசும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது நிறுவனம் செயல்படும் அலுவலகத்திற்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து இருந்தார். அதன்பேரில் அந்த நிறுவன பணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேர்காணலுக்கு சென்றிருந்தார்.
அந்தப் பெண்ணிடம் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு ஆபாச வார்த்தைகள் பேசி அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். வேலைக்கு நேர்காணலுக்கு வந்து இருந்த பெண்ணிடம் நிறுவன உரிமையாளர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : அசோக் குமார்
April 29, 2022 11:34 AM IST