
Last Updated:
நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியே வந்த விஜய், பட்டினப்பாக்கம் இல்லத்திற்குச் சென்றார்.
தவெக தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கடந்த சனிக்கிழமை (27ஆம் தேதி) நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு இதுவரை 41 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த அன்று இரவே விஜய், கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இந்த மரணம் குறித்து எழுப்பிய கேள்விக்கும் கூட அவர் எந்தப் பதிலும், வருத்தமும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதன்பிறகு தனது எஸ்க் பக்கத்தில் வருத்தமும், இரங்கல் தெரிவித்த விஜய் பின்னர் நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு தனது நீலாங்கரை வீட்டிற்குச் சென்ற விஜய், இன்று (29ஆம் தேதி) காலை தனது வீட்டில் இருந்து வெளியேவந்துள்ளார்.
நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியே வந்த விஜய், பட்டினப்பாக்கம் இல்லத்திற்குச் சென்றார். அவர் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த இரவில் இருந்தே விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு வந்துள்ள காவலர்கள் அவரது பாதுகாப்புக்காக வந்துள்ளனர். மொத்தம், அங்கு தற்போது 10 காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை மீண்டும் பட்டினப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு அவர் திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அவர் தங்கியிருக்கும் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் யாரையும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
September 29, 2025 11:30 AM IST