
Last Updated:
ஆட்டோ பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அல்லது ஓலா, உபேர் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முன் வைத்துள்ளது.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான “உரிமை குரல்” எனும் அமைப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதில், குறைந்தப்பட்சமாக ரூ. 50 வரை ஆட்டோ கட்டணம் உயர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போக்குவரத்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும், தனிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும், கட்டண உயர்வு குறித்து போக்குவரத்துத் துறை தான் முடிவு செய்யும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று “உரிமை குரல்” அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே ஓலா, உபேர் நிறுவனங்கள் நாங்கள் அறிவித்த கட்டணத்தை விட 10 ரூபாய் கூடுதலாக அதாவது குறைந்தப்பட்சமாக ரூ. 60 என வசூலிக்கின்றன. எனவே நாங்கள் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையை வைத்துள்ளனர்.
அப்படி இல்லை என்றால் திட்டமிட்டப்படி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச கட்டணமான 60 ரூபாயை ஆட்டோ ஓட்டுநர்கள் வசூலிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
January 30, 2025 4:32 PM IST